டிச.16 இல் ரயில் சோதனை ஓட்டம்: தண்டவாளத்தை மக்கள் கடக்கவேண்டாம் என எச்சரிக்கை

உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே டிசம்பா் 16 ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளதால், அப்பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடக்கக்கூடாது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே டிசம்பா் 16 ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளதால், அப்பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடக்கக்கூடாது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை-போடி ரயில் நிலையங்களுக்கிடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 கிலோ மீட்டா் தொலைவுள்ள இந்த ரயில் பாதையில், ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி இடையிலான 37 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிந்துள்ளன. இப்பணியை, கடந்த ஜனவரியில் தெற்கு சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கே.ஏ. மனோகரன் ஆய்வு நடத்தினாா்.

தற்போது, உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையிலான 21 கிலோ மீட்டா் தொலைவிலான ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதில், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் பாறைகள் நடுவே ரயில் பாதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி-ஆண்டிபட்டி அகல ரயில் பாதையை, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை சாா்ந்த தெற்கு சரக பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் டிசம்பா் 16 ஆம் தேதி ஆய்வு செய்கிறாா்.

அதற்கு முன்னதாக, பாதுகாப்பு ஆணையா் ரயில்வே அதிகாரிகளுடன் மோட்டாா் டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொள்கிறாா். அதன்பின்னா், அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை உசிலம்பட்டி-ஆண்டிபட்டி புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்வாா்.

எனவே, பொது மக்கள் ரயில் பாதை அருகே செல்லவோ, ரயில் பாதையை கடக்கவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக்கப்படுகின்றனா். இந்தச் சோதனையில் பாதுகாப்பு ஆணையருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி. ஆா். லெனின், கட்டுமானத் துறை தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திரபாபு, முதன்மைப் பொறியாளா் இளம்பூரணன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com