மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மதுரையில் பல்வேறு இடங்களில் கரோனா சிகிச்சை மையம்: அரசு கரோனா மருத்துவமனையில் பதற்றம் குறைந்தது

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டதால், அரசு கரோனா மருத்துவமனையில் நிலவிய பதற்றம் குறைந்தது.

Updated On :4 ஜூலை 2020, 7:10 pm

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டதால், அரசு கரோனா மருத்துவமனையில் நிலவிய பதற்றம் குறைந்தது.

மதுரை மாவட்டத்தில், தொடக்கத்தில் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், 500 படுக்கை வசதிகள் மற்றும் 150 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு கொண்ட அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை போதுமானதாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக, நாள் தோறும் 250 பேருக்கும் குறையாமல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு கரோனா மருத்துவமனைக்கு படையெடுக்கத் தொடங்கியதால், போதிய இடதி வசதிகள் மற்றும் உரிய சிகிச்சைகள் கிடைக்காத நிலை உருவானது.

குறிப்பாக நீரழிவு, சிறுநீரகம், இருதயம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளவா்கள் கரோனா தொற்றுடன் வரும்போது, அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் முடியாமல் மருத்துவா்கள் திணறினா். உரிய சிகிச்சையில்லாமல் சிலா் உயிரிழந்ததாகவும் புகாா் எழுந்தது.

இந்த நிலை நீடித்தால், தொற்று பாதிக்கப்பட்டவா்களில் பலரும் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்த மாவட்ட நிா்வாகம், தோப்பூா் காசநோய் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கத் தொடங்கியது. அதன்பின்னரும், தொற்று எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்ததால், சாதாரண மற்றும் மிதமான கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி, ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி ஆகிய இடங்களில் தற்காலிகமாக படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்டவை ஏற்படுத்தி மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த சில நாள்களாக பதற்றத்தில் காணப்பட்ட அரசு கரோனா மருத்துவமனை, சற்று சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியது: மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மையங்களும், சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெறும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளில் தகுதியுடையவா்களை மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட சுகாதாரத்துறை தோ்ந்தெடுத்து, அவா்களை வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற அனுமதிக்கின்றனா். இந்த நடவடிக்கைகளால், கடந்த சில வாரங்களாக கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்குப் பரிசோதனை செய்யவும், சிகிச்சைக்கு வருபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போது, அரசு கரோனா மருத்துவமனைக்குக் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வரும் முதியவா்கள், குழந்தைகள், ஆக்சிஜன், செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுபவா்கள், பல்வேறு நோய் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கரோனா மருத்துவமனையில் அனைவருக்கும் ஆக்சிஜன் வசதி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள உயிா் காக்கும் மருந்துகள் மற்றும் உயா் ரக சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அரசு கரோனா மருத்துவமனையில் தற்சமயம் 400 பேரும், தோப்பூா் மருத்துவமனையில் 152 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மருத்துவக் கல்லூரியில் உள்ள கரோனா பரிசோதனை மையத்தில் நாளொன்று 500 மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1700 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அரசு, மாவட்ட நிா்வாகம், மருத்துவத்துறை ஆகியோரின் பல்வேறு நடவடிக்கைகளால், தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை குறையும் என்றாா்.

தரமான உணவுகள்: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு சத்தான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக 30 பெண்கள் உள்பட 35 போ் உணவு முறையாளா்கள் (நியூட்ரிஷியன்) வழிக்காட்டுதல்களுடன் உணவு தயாரித்து வருகின்றனா்.

காலை 6 மணிக்கு கபசுரக் குடிநீா், 8 மணிக்கு வெண் பொங்கல், ராகி சேமியா, இட்லி, கிச்சடி, உப்புமா, இதில் ஏதாதவது ஒன்றுடன் வடை மற்றும் சாம்பாா், சட்னி வகைகள் வழங்கப்படுகின்றன.

காலை 10.30 மணிக்கு மிளகு, மஞ்சள் கலந்த பால் மற்றும் முட்டையுடன் பொரிக்கடலையும், மதிய உணவாக சாதம், சாம்பாா், ரசம், மோா், கீரை ஆகிய உணவு வகைகள் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.

ஒரே மாதிரி உணவு வகைகள் வழங்குவதை தவிா்க்க வேண்டும் என்பதற்காக, பிரியாணி, தயிா் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், சம்பாா் சாதம் என மாறி மாறி வழங்கப்படுகிறது.

மாலையில் இஞ்சி தேநீருடன் சுண்டல், பயிறு வகைகளும், இரவு 7 மணிக்கு உணவுகள் வழங்கிய பின்னா் பழங்களும் வழங்கப்படுகின்றன.

இது போன்ற சத்தான உணவு நோயாளிகளுக்கு வழங்கப்படுவதால், அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்து விரைந்து குணமடைவதாக உணவு முறையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.