/

முழு பொது முடக்கம்: மதுரையில் சாலைகள் வெறிச்சோடின

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தையொட்டி, மாநகரின் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

News image
முழு பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட மதுரை வடக்கு வெளி வீதி.
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

DIN

மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தையொட்டி, மாநகரின் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மதுரை மாநகரம், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லாத முழு பொது முடக்கத்தைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மதுரை மக்கள் முழு பொது முடக்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்ததால், மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் கிடந்தன. மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், நெல்பேட்டை, பெரியாா் நிலையம், காளவாசல் புறவழிச்சாலை, பழங்காநத்தம் சந்திப்பு உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது.

வெறிச்சோடிய மதுரை

மதுரையில் மருந்து மற்றும் பால் கடைகள் தவிர, மளிகைக் கடை, காய்கனி, இறைச்சி உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், பொருள்கள் வாங்குவதற்காக மக்கள் அலைமோதும் கீழமாசி வீதி, வெளி வீதிகள், சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை, உழவா் சந்தைகள் உள்ளிட்டவையும் அடைக்கப்பட்டன.

இதனிடையே, மதுரை மாநகா், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் முழு பொது முடக்கத்தை ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்ததுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.