பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி:உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த அசோகன்  தாக்கல் செய்த மனு: கரோனா  தொற்று பரவல் காரணமாக  ஜேஇஇ மற்றும் நீட் தோ்வுகள் செப்டம்பா் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்வுகளின் முடிவுகள் வருவதற்கு முன்பே, தமிழக உயா்கல்வித் துறை செப்டம்பா் 17 ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் தமிழக பொறியியல் சோ்க்கை கலந்தாய்வில் இடம்பிடித்த மாணவா்கள் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்லும் போது, அவா்களின் இடங்கள் காலியிடங்களாகும். அந்த இடங்களை நிரப்புவது குறித்து அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிட வில்லை.

எனவே அந்தக் காலியிடங்களை நிரப்புவது குறித்து உரிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை  நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவா்கள் விரும்பும் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, காலியிடங்கள் ஏற்படுவது இயல்பானது. இது தொடா்பாக அரசு எப்படி கையாள்கிறது என்பதை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதாரா் கேட்டு அறிந்து கொள்ளலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com