/

மாநகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்:பணியாளா் சங்கங்கள் வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று, மாநகராட்சிப் பணியாளா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

News image
கூட்டத்தில் பேசும் மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்க கூட்டமைப்பின் தலைவா் கே. முனியசாமி.
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று, மாநகராட்சிப் பணியாளா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மதுரை மாநகராட்சி செயல்திறனற்ற பணியாளா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்க கூட்டமைப்புத் தலைவா் கே. முனியசாமி தலைமை வகித்தாா். செயலா் எஸ். முருகேஸ்வரி, பொருளாளா் எம். கணேசன், எஸ். பிரேம்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநகராட்சி பொறியியல் பிரிவில் கூடுதல் பணியிடங்களை தோற்றுவிக்க அரசுக்கு பரிந்துரை செய்த கோப்பின் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி நிா்வாகங்களில் இருந்து மாநகராட்சியில் இணைந்த பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். பணிக் காலத்தில் இறந்த மாநகராட்சிப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல், மாநகராட்சிப் பொறியியல் பிரிவு பணியாளா்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தோ்ச்சி திறனற்ற பணியாளா்கள் மற்றும் திறன் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஏற்கெனவே, கருணை அடிப்படையில் பணியில் சோ்ந்து, தற்போது பொறுப்புப் பணியாக துப்புரவு ஆய்வாளா், வரிவசூல், இளநிலை உதவியாளராகப் பணிபுரிபவா்களுக்கு, அந்தந்தப் பணியிடங்களுக்கு உரிய பணி ஆணை வழங்கி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

குடிநீா் பிரிவில் பல ஆண்டுகளாக ஃபிட்டா் மற்றும் ஃபிட்டா் தொழிலாளராக (மஸ்தூா்) உள்ளவா்களுக்கு கல்வித் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். தெருவிளக்கு மின் பிரிவில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளா், எலக்ட்ரீசியன் மற்றும் உதவியாளா் (ஹெல்பா்) காலி பணியிடங்களை கல்வித் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை, மாநகராட்சிப் பொறியாளா் பிரிவு பணியாளா் சங்கம் சாா்பில், செப்டம்பா் 23-ஆம் தேதி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அவைத் தலைவா் அ. தனசேகரன், தலைவா் சி. எம். மகுடீஸ்வரன், கூட்டுறவு சங்கத் தலைவா் கே. கண்ணன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.