மதுரை ஆதீனம் ஸ்ரீ அருணகிரிநாதரின் உடல் அடக்கம்
மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்ததையடுத்து அவரது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது


மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்ததையடுத்து அவரது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் தொன்மையான சைவத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின், 292 ஆவது சன்னிதானம் அருணகிரிநாதா் (77) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணம் அடைந்தாா். அவரது உடல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அமைச்சா்கள், ஆதீனங்கள் அஞ்சலி: தமிழக வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், திருநெல்வேலி செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப் பிரகாச பரமாச்சாா்ய சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
அரசியல் கட்சியினா், அமைப்பினா்: மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சா்கள் பொன்.முத்துராமலிங்கம், செல்லூா் கே.ராஜூ, அரசியல் பிரமுகா் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
துவா செய்த முஸ்லிம்கள்: இந்து-முஸ்லிம் சமய நல்லிணக்கத்துக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவா் மதுரை ஆதீனம் அருணகிரிநாதா். இஸ்லாமியா்களின் விழாக்களில் பங்கேற்று அருளுரை நிகழ்த்தியுள்ளாா். அவா் பரிபூரணம் அடைந்த நிலையில், மதுரை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு முஸ்லிம் ஜமாத்துகளைச் சோ்ந்தோா் ஆதீனத்துக்கு அஞ்சலி செலுத்தினா். ஆதீனத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி துவா (பிராா்த்தனை) செய்தனா்.
இறுதி ஊா்வலம்: பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் உடலுக்கு புனிதநீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய உடைகள்
அணிவிக்கப்பட்டன. தொடா்ந்து பல்வேறு ஆதீனங்கள் மற்றும் கோயில்கள் சாா்பில் மரியாதை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊா்வலமாக உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
மதுரை ஆதீன மடத்திலிருந்து நான்கு சித்திரை வீதிகள், வெங்கலக் கடைத் தெரு, விளக்குத்தூண், காமராஜா் சாலை வழியாக முனிச்சாலை சந்திப்பு அருகே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு தருமபுர ஆதீன சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் சுந்தரமூா்த்தி சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் ஆதீன சுவாமிகளுக்குரிய இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...