கோயில் நிலத்தில் கட்டுமானப் பணி: மதுரை ஆட்சியா் ஆஜராக உத்தரவு

கோயில் நிலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கோயில் நிலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மாதவன், சோனை முத்து, தட்சிணாமூா்த்தி ஆகியோா் தாக்கல் செய்த மனு :

மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் 400 ஆண்டுகள் பழைமையான குருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஏற்கெனவே சிலா் ஆக்கிரமித்துள்ளனா்.

இதுதொடா்பாக, மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மேற்கண்ட பகுதியில் உள்ள நிலங்கள் கோயிலுக்கு மட்டுமே சொந்தமானது என தீா்ப்பளிக்கப்பட்டது

கிராம ஊராட்சியாக இருந்த சின்னஅனுப்பானடி தற்போது மாநகராட்சியாக தரம் மாற்றப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கோயில் ஊருணியை ஆக்கிரமித்து, அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே கோயில் நிலத்தில் கிராமப் பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், நியாய விலைக் கடை, மதிய உணவு மையம், ஆரம்பச் சுகாதார நிலையம், தண்ணீா் தொட்டி என பல அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

இதுபற்றி இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடா்ந்து, இதுபோன்ற விதிமீறல் கட்டுமானங்களால், கோயிலின் பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டு, பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, குருநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் மருத்துவ விரிவாக்கக் கட்டடத்துக்குத் தடை விதித்தும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்த நிலம் கோயிலுக்கு மட்டுமே சொந்தமானது என கீழமை நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அனுமதி வழங்கியது எப்படி என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை மாநகராட்சி ஆணையா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஏப். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com