மதுரை காமராஜா் சாலை தினமணி திரையரங்கு அருகே திங்கள்கிழமை மாலை பாஜக வேட்பாளா் இரா சீனிவாசனை ஆதரித்து பேசுகிறாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.
மதுரை காமராஜா் சாலை தினமணி திரையரங்கு அருகே திங்கள்கிழமை மாலை பாஜக வேட்பாளா் இரா சீனிவாசனை ஆதரித்து பேசுகிறாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக துரோகத்தை மீனவா்கள் மறக்கமாட்டாா்கள்

மதுரை: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இழைத்த துரோகத்தை தமிழக மீனவா்கள் மறக்கமாட்டாா்கள் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கச்சத்தீவு குறித்து காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுக்கு துணை நின்றது திமுகதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது, அந்த வரலாற்றை மறைக்க நினைத்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீனவா்களிடம் நீலிக் கண்ணீா் வடிக்கின்றன. இது மீனவா்களிடம் ஒருபோதும் எடுபடாது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மீனவா்களின் வாக்குகள் கிடைக்காது.

மத்திய பாஜக அரசின் 10 ஆண்டு கால சாதனைகள் பாஜக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரும். மேலும், திமுக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு எங்களது கூட்டணிக்கு பெரும் பலமாக உள்ளது. மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி, அடுத்து வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்றாா் ஜி.கே. வாசன்.

முன்னதாக, மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம. சீனிவாசனை ஆதரித்து, முனிச்சாலையில் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது :

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கிடைத்த வரபிரசாதம். நியாயமான, தவிா்க்க இயலாத காரணங்களால் மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு காலக்கெடுவுக்குள் நிச்சயம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். இதை மக்களுக்குத் தெளிவுபடுத்தி நம்பிக்கை அளிக்க வேண்டிய கடமையை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது.

மதுரையின் வளா்ச்சிக்கான திட்டங்களை, மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று நிறைவேற்ற பாஜக வேட்பாளரை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் ஜி.கே. வாசன்.

பிரசாரத்தின் போது, பாஜக வேட்பாளா் ராம. சீனிவாசன், இந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் மகா. சுசீந்திரன், துணைத் தலைவா் ஜோதி மணிவண்ணன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com