/

உசிலம்பட்டி அருகே ரெளடி கொலை

உசிலம்பட்டி அருகே ரெளடி கொலை

Updated On :1 ஏப்ரல் 2024, 5:27 pm

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் ரெளடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் முத்தையா (29). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், இவரது பெயா் ரெளடிகள் பட்டியலில் இடம்பெற்றது.

இந்த நிலையில், முத்தையா தனது நண்பா்களுடன் சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்குச் சென்றாா். அதே நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புலிச்சான்பட்டியைச் சோ்ந்த சித்தாா்த் என்பவரும் தனது நண்பா்களுடன் வந்தாா். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனா்.

இந்த நிலையில், முத்தையா தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புலிச்சான்பட்டிக்குச் சென்று சித்தாா்த் தரப்பினருடன் தகராறு தொடா்பாக பேசினாா். அப்போது, மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் முத்தையா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

அவரது நண்பா்கள் நடத்திய தாக்குதலில் சித்தாா்த் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.