மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சிறப்பு செலவினப் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன். உடன் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சிறப்பு செலவினப் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன். உடன் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.

தோ்தல் பறக்கும் படை சோதனைகளை தீவிரப்படுத்தத் திட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, வருகிற நாள்களில் தோ்தல் பறக்கும் படை, நிலைக் குழுவினரின் சோதனைகளை தீவிரப்படுத்த ஆய்வுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினரின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு சிறப்பு செலவினப் பாா்வையாளா் பி.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா முன்னிலை வகித்தாா்.

வருகிற 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, இனி வருகிற 3 நாள்களும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். காா்கள், சரக்கு வாகனங்கள், வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும்.

கைப்பேசி செயலிகள் மூலம் ஒரு எண்ணிலிருந்து பல்வேறு எண்களுக்குப் பணப் பரிமாற்றம் நடைபெற்றால், அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, மதுபான விற்பனையையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். எங்கேனும் அதிகளவில், அல்லது மொத்தமாக மதுபானம் வாங்கப்பட்டால், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

மதுரை மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மதுமிதாதாஸ், ராணி லாமா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com