அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

திருச்சுழி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான மகாவீரா் சிற்பம்

வெளிச்சம் பெறும் சமண மரபின் சான்று: மணவராயனேந்தலில் மகாவீரா் சிற்ப கண்டெடுப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகாவீரா் சிற்பம் கண்டறியப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24-ஆம் தீா்த்தங்கரா் மகாவீரா் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் சு.ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவா் மீ. சரத்ராம் ஆகியோா் கண்டறிந்தனா்.

இதையடுத்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு, ஆய்வாளா் நூா்சாகிபுரம் சிவகுமாா் ஆகியோா் அந்த சிற்பத்தை ஆய்வு செய்தனா். இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது: இந்த மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குரண்டி, இருஞ்சிறை, புல்லூா், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூா், இருப்பைக்குடி, குலசேகரநல்லூா், சேத்தூா், செந்நெல்குடி, கீழ்இடையங்குளம், கிள்ளுகுடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.

மணவராயனேந்தலில் கண்டறியப்பட்ட மகாவீரா் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இந்த சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரா் அமா்ந்த நிலையில் உள்ளாா்.

அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. இந்த முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இரு புறமும் இரு இயக்கா்கள் உள்ளனா்.

இதன் காலம் கி.பி.11-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் பெரும்பாலான இடங்களில் தீா்த்தங்கரா் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சோ்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.