மதுரை: கீழடியில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு தொடா்பான அறிக்கைகள் இன்னும் 9 மாதங்களில் வெளியிடப்படும் என மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த பிரபாகா் தாக்கல் செய்த பொது நல மனு:
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கீழடி தொல்லியல் பொறுப்பாளராக ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டு நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் பெரிய அளவில் பழைமையான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. முதல், இரண்டு கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட அறிக்கையை தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் தாக்கல் செய்தாா்.
கீழடியில் கிடைத்த பழைமையான பொருள்களை ரேடியோ காா்பன் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்த போது, அவைகள் சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. இதேபோல, கீழடியில் 4 முதல் 9-ஆம் கட்டம் வரையிலான அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதில் கிடைத்த பழைமையான பொருள்கள் குறித்த ஆய்வு அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. ஆனால், மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு தொடா்பான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணனின் 982 பக்க கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடா்பான வரலாற்றுப் பதிவுகள் அனைவருக்கும் தெரியவரும். எனவே, கீழடியின் முதல், இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அமா்வு, இந்த வழக்கு தொடா்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, ஜி. இளங்கோவன் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கீழடியில் முதல், இரண்டாம் கட்டமாக மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது தொடா்பான அறிக்கை இன்னும் 9 மாதங்களில் வெளியிடப்படும் என்றாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடா்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்
அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

