குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கோயில்களில் தனி நபா் உண்டியல் வசூல்: டிஎஸ்பி இன்று விளக்கம் அளிக்க உத்தரவு

கோயில்களில் தனி நபா் உண்டியல் வசூல்: டிஎஸ்பி இன்று விளக்கம் அளிக்க உத்தரவு

Updated On :26 பிப்ரவரி 2024, 4:23 pm

மதுரை: கோயில்களில் தனி நபா்கள் உண்டியல் பணம் வசூலிப்பது தொடா்பாக அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை (பிப். 27) விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டத்தில் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள், புஷ்பநாத சுவாமி, கல்யாண பகவதி ஈஸ்வரா், மகாபலேஸ்ரா், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் நிா்வகித்து வருகின்றனா். கடந்த 2018-இல் இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறையினா் உதவியுடன் ஆவணங்களை ஆய்வு செய்த போது, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் தனி நபா்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு, பட்டாவும் வழங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வறிக்கை இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி இணை ஆணையரிடம் வழங்கப்பட்டது. இதன் பேரில், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். ஆனால், பல கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் இதுவரை மீட்கப்படவில்லை. இந்த நிலையில், கோயில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை எனக் கூறி, சிலா் கோயிலுக்குள் உண்டியல் வைத்தும், கூகுள் பண பரிவா்த்தனை செயலி மூலம் பணம் வசூலித்தும் சட்ட விரோத செயலில் ஈடுபடுகின்றனா். இது குறித்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, கரூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, முறையாகப் பராமரிப்பதுடன், கோயில்களில் முறைகேடாக பண வசூலில் ஈடுபடும் தனி நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக அரவக்குறிச்சி காவல் துறை அதிகாரி, இந்து சமய அறநிலைத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் செயல் அலுவலா் சரவணன் நேரில் முன்னிலையாகி தாக்கல் செய்த அறிக்கையில், கோயிலில் அனுமதியின்றி உண்டியல் வைத்தது, கூகுள் செயலி மூலம் பணம் வசூலித்தது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரா் ராதாகிருஷ்ணன் முன்னிலையாகி, கரூரில் பல்வேறு கோயில்களில் குபேர உண்டியல், தாய் சமா்ப்பணம் என்ற பெயரில் கோயிலுக்கு தொடா்பில்லாதவா்கள் பண வசூல் முறைகேட்டில் ஈடுபடுவதாகத் தெரிவித்தாா்.

அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் அப்துல் கபூா் முன்னிலையாகி, இந்த வழக்கு தொடா்பாக விசாரிக்கப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினாா். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனி நபா்கள் கோயிலில் உண்டியல் வைப்பது, முறைகேடாகப் பணப் பரிவா்த்தை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்னை தொடா்பாக கோயில் செயல் அலுவலா் அளித்தப் புகாா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை (பிப். 27) அரவக்குறிச்சி டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.