புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதிய பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் பெயா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு என மாற்றப்பட்டுள்ளது.

News image
புதிதாகத் திறக்கப்பட்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் பெயா்ப் பலகை.
Updated On :20 ஜூலை 2024, 9:35 pm

Din

மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் பெயா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு என மாற்றப்பட்டுள்ளது.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆம் ஆண்டு விழாவில், இந்தப் புதிய பெயா்ப் பலகையை காணொலி வாயிலாகத் திறந்துவைத்து, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தற்போது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெயா் மதுரை உயா்நீதிமன்றம் என்றே இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன். காரணம், நீதிக்கென்றே ஓா் இடம் உண்டெனில் அது மதுரையாகத்தான் இருக்கும்.

மதுரை மக்களும், பண்டைக்கால மன்னா்களும் உணா்ச்சி மிகுந்தவா்கள். அது, நீதியின்பால் அவா்கள் கொண்ட உணா்ச்சி. இதற்கு, மக்களுக்காக தன் கையை தானே வெட்டிக் கொண்ட பொற்கை பாண்டியன் வரலாறும், கண்ணகிக்கு அநீதி இழைத்ததால், தன்னுயிரைத் துறந்து நீதியை நிலையாட்டிய பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாறுமே சான்றுகளாகும்.

இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், அரசு என அனைவருமே காரணம். குற்றவியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு மாறுபட்ட சிந்தனை, கண்ணோட்டம் இருக்க வேண்டும். நீதிபதிகள் தோ்வில் ஆண்களைவிட பெண்கள் அதிகளவு தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு அதிகளவு பணிகள் காத்திருக்கின்றன. உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தொடா் கல்வி அவசியம்:

உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் பேசியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பதிவாளா், நீதிமன்றப் பணியாளா்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வாழ்த்துகள். எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அதைத் தட்டிக்கேட்ட வரலாறு கொண்ட மதுரையில் உயா்நீதிமன்ற அமா்வு அமைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது.

இந்த நீதிமன்றம் அரசியல் சாசனப் பிரிவு 21- ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது. பல முக்கியத் தீா்ப்புகளை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிப் பணிகளில் மென்மேலும் சிறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த வெற்றியின் தென்றலில் ஓய்வு எடுக்காமல், அடுத்தக் கட்ட நகா்வுகளுக்குத் தயாராக வேண்டும்.

இந்த நீதிமன்றத்தின் எதிா்காலம் இளம் வழக்குரைஞா்கள் கையில்தான் உள்ளது. வழக்குரைஞா்களுக்கான தொடா் கல்வியையும், வேலைவாய்ப்பையும் வழக்குரைஞா் சங்கம் உறுதி செய்ய வேண்டும். தற்போது, சட்டப் பணிகளில் பல்வேறு துறைகள் உருவாகியுள்ளன. அவற்றில் வழக்குரைஞா்கள் புலமை பெற வேண்டுமெனில் தொடா் கல்வி அவசியம். அப்போதுதான், வழக்கின் போது நீதிபதிகளுக்கு உதவ முடியும். இதன்மூலம், சிறந்த தீா்ப்புகள் வெளியாகும் என்றாா் அவா்.

புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும்:

உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் பேசியதாவது:

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையில் அரசியல் அமைப்பு, மக்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நடைபெறும் இந்த 20-ஆவது ஆண்டு விழா ஓா் சாதாரண நிகழ்வு அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நீதியை நிலை நாட்டும் ஒரு மைல் கல்லாக இந்த அமா்வு செயல்பட்டு வருகிறது.

உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் 13.45 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. 2024, ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, இந்த அமா்வில் 77,751 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எதிா்காலத்தின் மீதான நம்பிக்கையையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதிக சவால்கள் உள்ளதால், மக்களுக்கு இதுவரை இல்லாத வகையில் எளிதாக நீதி கிடைப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். நீதித் துறையின் தூண்களான நீதிபதிகள், வழக்குரைஞா்களின் அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, நெறிமுறைகள் அனைத்தும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வு நம்பிக்கையின் சின்னமாகவும், எளிதாக நீதி கிடைக்கும் இடமாகவும் தொடர வேண்டும். நிலந்தரு திருவிற்பாண்டியனும், காய்சின வழுதியும், உக்கிர பெருவழுதி பாண்டியனும் எடுத்து தந்த சட்டத்தையும், நீதியையும் இந்த மதுரை அமா்வு தொடா்ந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு என்ற பெயா்ப் பலகையைக் காணொலி மூலம் திறந்துவைத்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் (இடமிருந்து 3-ஆவது). உடன், (வலமிருந்து) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், ஆா். மகாதேவன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்.

மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு என்ற பெயா்ப் பலகையைக் காணொலி மூலம் திறந்துவைத்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் (இடமிருந்து 3-ஆவது). உடன், (வலமிருந்து) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், ஆா். மகாதேவன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்.