பழனி கிரிவலப் பாதையில் வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது
பழனி கிரிவலப் பாதையில் வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது


பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பழனி முருகன் கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன்காரணமாக, பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அவற்றை அகற்ற நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும், இன்னமும் முழுமையாக அகற்றப்படவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு: பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள மடங்கள் தொடா்ந்து செயல்படலாம். வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம். ஆக்கிரமிப்புகள் அகற்றம், சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எந்தவித தாமதமுமின்றி வழங்க வேண்டும். பக்தா்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை வேண்டும். பழனி முருகன் கோயில், கிரிவலப் பாதையில் பட்டா வைத்திருப்பவா்கள் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று வருவது தொடா்பாக வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். இந்த மனுக்களை வருவாய்க் கோட்டாட்சியா் பழனி முருகன் கோயில் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்து, அவை தொடா்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா உள்ளவா்களை அனுமதிப்பது, கடை நடத்துவது தொடா்பான முடிவுகளை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும். பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...