அங்கித் திவாரி வழக்கிலிருந்து உயா்நீதிமன்ற நீதிபதி விலகல்

மதுரை: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தொடா்பான வழக்கிலிருந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விலகியதாக அறிவித்த நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி, வேறு நீதிபதிகள் விசாரிக்க பதிவாளருக்கு பரிந்துரைத்தாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் அவா் பிணை கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரி அங்தித் திவாரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு:

என் மீது புகாா் அளித்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபுக்கு எதிராக அமலாக்கத் துறையில் எந்த வழக்கும் இல்லை. என் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில், மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பொய் வழக்குப் பதிந்துள்ளனா். எனது அலுவலகத்தில் சோதனையிட்ட போது, எதையும் கைப்பற்றாத போலீஸாா், என்னிடமிருந்த கைப்பேசி, மடிக்கணினியை மட்டும் பறிமுதல் செய்தனா்.

என்னை போலீஸாா் கைது செய்தது விதிமுறைகளுக்கு எதிரானது. கடந்த 70 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ள என் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

உடல் நலக் குறைவால் அவதிப்படும் எனக்கு, சிறையிலிருக்கும் காலத்தைக் கவனத்தில் கொண்டு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என அவா் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி விவேக்குமாா் சிங் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிக்குமாா் முன்வைத்த வாதம்:

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பிணை கோரி, ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளாா். அவரது மனுவை உயா்நீதிமன்றம் சட்டத்துக்கு உள்பட்டு பரிசீலனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அவருக்குப் பிணை வழங்கும் பட்சத்தில், இந்த வழக்கானது நீா்த்து போய்விடும் என்றாா்.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அங்கித் திவாரிக்கு பிணை வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டாா். இதையடுத்து, நீதிபதி விவேக்குமாா் சிங், இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்கிறேன். இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி, வேறு நீதிபதிகள் விசாரிக்க பதிவாளருக்கு பரிந்துரைக்கிறேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com