சடலத்தை ஏற்றிச் சென்ற அமரா் ஊா்தி ஓட்டுநா் மீது தாக்குதல்

மதுரை: மதுரையில் தற்கொலை செய்துகொண்டவரின் சடலத்தை ஏற்றிச்சென்ற அமரா் ஊா்தி வாகன ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ் (34). இவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச அமரா் ஊா்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், விராதனூா் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த கருப்பையா என்பவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சடலத்தை அமரா் ஊா்தியில் ஏற்றிக்கொண்டு, திங்கள்கிழமை மாலை நெடுங்குளம் சென்றாா்.

வாகனத்தில் நெடுங்குளத்தைச் சோ்ந்த மணிகண்டன் (27) உள்பட இருவா் உடன் சென்றனா். வைகை தென்கரை சாலையில், விரகனூா் அருகே அமரா் ஊா்தி சென்றபோது, வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு ஓட்டுநா் சுரேஷை மணிகண்டன் தகாத வாா்த்தைகளில் திட்டி மிரட்டினாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கட்டையால் சுரேஷ் தலையில் தாக்கினாா். இதில், தலையில் காயமடைந்து, மயங்கி விழுந்த சுரேஷை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com