/

மதுரையில் ஒலிம்பிக் அகாதெமி கட்டும் பணி: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கிவைத்தாா்

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் அகாதெமி கட்டடம் கட்டுவதற்கான பணியை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒலிம்பிக் அகாதெமி கட்டடம் கட்டுவதற்கான பணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் பி. மூா்த்தி. உடன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மேயா் வ. இந்திராணி உள்ளிட்டோா்.
Updated On :14 நவம்பர் 2024, 11:43 pm

Din

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் அகாதெமி கட்டடம் கட்டுவதற்கான பணியை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மதுரை மாவட்டத்தில் ரூ. 6 கோடியில் ஒலிம்பிக் அகாதெமி கட்டடம் கட்டப்படும் என தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் 2024-25-ஆம் ஆண்டுக்கான செயல் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 11-ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மதுரையில் ஒலிம்பிக் அகாதெமி கட்டடம் கட்டும் பணிக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து, பணிகள் தொடக்க நிகழ்ச்சி மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகர மேயா் வ. இந்திராணி, சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய உடற்பயிற்சிக் கூடம்

ஒலிம்பிக் அகாதெமி அமைக்கப்படுவதன் மூலம் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தின் தரை தளத்தில் கபடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 மேசைப் பந்து ஆடுகளங்களையும், 250 இருக்கைகளையும் கொண்ட உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும். இதில் ஆண், பெண் உடைமாற்றும் அறைகளும் இருக்கும். நவீன வசதிகள் கொண்ட புதிய உடற்பயிற்சிக் கூடம் அமையும்.

தற்போதுள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளமும், டென்னிஸ் ஆடுகளமும் செயற்கை தரையமைப்புடன், பாா்வையாளா்கள் இருக்கைகளைக் கொண்ட புதிய ஆடுகளங்களாக சீரமைக்கப்படும்.