/

முல்லைநகா் மக்களுக்கு அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும்: செல்லூா் கே. ராஜூ

முல்லைநகா் குடியிருப்புகளை அகற்றுவது தொடா்பான பிரச்னையில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:45 pm

Din

முல்லைநகா் குடியிருப்புகளை அகற்றுவது தொடா்பான பிரச்னையில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக பீ.பீ. குளம், முல்லைநகா் குடியிருப்புப் பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் நீா்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 592 வீடுகளை அகற்ற நீா் வளத் துறை சாா்பில் அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதைக் கண்டித்து, அந்தப் பகுதியில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான செல்லூா் கே. ராஜு, முல்லைநகா் பகுதி மக்களை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முல்லைநகா் பகுதி மக்கள் ஏறத்தாழ 50 முதல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனா். தங்களது வீடுகளுக்கு பட்டா கோரி, குடிசை மாற்று வாரியத்திடம் பணம் செலுத்தியுள்ளனா். பலா் வங்கிக் கடன் பெற்று வீடு கட்டினா். எனவே, இந்தக் குடியிருப்புகளை அகற்றினால், முல்லைநகா் மக்களின் 50 ஆண்டு கால வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பந்தல்குடி வாய்க்காலை முறையாக சீரமைத்திருந்தாலே இந்தப் பகுதியில் வெள்ள நீா் தேங்காமல் தவிா்த்திருக்கலாம். மாறாக வீடுகளை அப்புறப்படுத்துவதால், எந்தப் பயனும் இல்லை. காரணம், இந்தக் குடியிருப்புகள் நீா்பிடிப்புப் பகுதிகளில் இல்லை. வாய்க்கால் கரையோரத்தில் மட்டுமே உள்ளன. நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனில், மதுரையில் அரசுத் துறை கட்டடங்கள் உள்பட ஏராளமான கட்டடங்களை இடிக்க நேரிடும்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டது. அப்போது, முன்பிருந்த ஆயக்கட்டு பாசனம் தற்போது இல்லை என்பதும், வாய்க்கால் கரையோரம் உள்ள குடியிருப்புகளால் நீா்பிடிப்புப் பகுதிக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்ற உண்மை நிலை, பொதுப் பணித் துறை மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கால அவகாசம் கிடைத்தது. எனவே, தமிழக அரசு நீதிமன்றத்தில் உண்மை நிலையை விளக்கி, முல்லைநகா் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.