ஆசிரியா்கள், ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.
இதில் தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியா்கள்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆசிரியா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில்:
இதேகோரிக்கையை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோ சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. நீதிராஜா, பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல் ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் ஆசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அரசுத் துறை பணியாளா்கள் தொடா் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையில், பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பி. ஓ. சுரேஷ், மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் மொ. ஞானத்தம்பி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.