உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

முதல் முறை குற்றவாளிகளை சிறையில் தனியாக அடைக்க வாய்ப்புள்ளதா?

குற்றச் செயலில் ஈடுபட்டு, முதல் முறையாக சிறைக்கு வருபவா்களைத் தனியாக அடைக்க வாய்ப்புள்ளதா? என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on

குற்றச் செயலில் ஈடுபட்டு, முதல் முறையாக சிறைக்கு வருபவா்களைத் தனியாக அடைக்க வாய்ப்புள்ளதா? என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி பரதசக்கரவா்த்தி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் சாா்பில் தாக்கலாகும் பிணை, முன்பிணை மனுக்களை விசாரித்து வருகிறாா்.

இந்த நீதிமன்றத்தில் கடந்த வாரம் சில மனுக்களை விசாரித்த நீதிபதி, சிலருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், அவா்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, மீண்டும் பிணை கோரி மனு தாக்கல் செய்தனா். அப்போது, நடை பெற்ற விசாரணையின் போது, முதல் முறை குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு வருபவா்கள், அந்தச் சிறையில் ஏற்கெனவே கஞ்சா வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் இருக்கும் அறையில் அடைக்கப்படுவதால், அவா்களுடன் பழக்கம் ஏற்படுகிறது. இதனால், முதல் முறை குற்றவாளிகள் சிறையிலிருந்து வெளியே வரும் போது, கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மதுரை சிறைத் துறை டிஐஜி, சிறைத் துறை கண்காணிப்பாளா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி, கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தனா்.

இதையடுத்து நீதிபதி பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

முதல் முறை குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு வருபவா்களை, தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டு ஏற்கெனவே சிறையில் உள்ளவா்களுடன் சோ்த்து அடைப்பதால், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவா்கள் மீண்டும் தவறான வழிக்குச் செல்கின்றனா்.

இதுபோன்ற இளைஞா்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. முதல் முறை குற்றவாளிகளை சிறையில் தனியாக அடைக்க வாய்ப்புள்ளதா?. இதுகுறித்து அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com