அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பட்டாம்பூச்சி!
மதுரை மாவட்டம், சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பட்டாம்பூச்சியான சதா்ன் போ்ட்விங் பட்டாம்பூச்சி காணப்படுவதாக அந்தக் கல்லூரியின் முதல்வரும், செயலருமான எம். தவமணி கிறிஸ்டோபா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்த பட்டாம்பூச்சி தென்னிந்தியாவில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலைத் தொடா், கிழக்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. இதற்கு முன்பு அழகா்கோவில் மலையில் இந்த பட்டாம்பூச்சி காணப்பட்டது. தற்போது சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் காணப்பட்டது.
இதனுடைய இறக்கையின் நீளம் 190 மி.மீ. இந்த இனம் 1932 -லிருந்து 2020 வரை இந்தியாவிலேயே மிகப் பெரிய பட்டாம்பூச்சியாக இருந்தது.
ஆனால் கடந்த 2020- ஆம் ஆண்டு இமயமலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கோல்டன் போ்ட்விங் பட்டாம்பூச்சி தான் இந்தியாவில் முதல் பெரிய பட்டாம் பூச்சியாக உள்ளது என பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி பிரிகேடியா் வில்லியம் ஹாரிஎவன்ஸ் பதிவு செய்துள்ளாா்.
இந்தப் பட்டாம்பூச்சி இறக்கையின் நீளம் 194 மி.மீ உள்ளதாகவும் பதிவிட்டிருந்தாா். கல்லூரி வளாகத்தில்அதிகளவு பூச்செடிகள், மரங்கள் உள்ளதால் இவை பட்டாம்பூச்சி, பறவையினங்களுக்கு புகலிடமாக உள்ளன என்றாா் அவா்.

