/

அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது? சுகாதார துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து பொது சுகாதாரத் துறைச் செயலா் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:42 pm

Din

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து பொது சுகாதாரத் துறைச் செயலா் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த வெரோனிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:

தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிறைவு செய்து வருகிறது. இந்த மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான எந்த உள்கட்டமைப்பு வசதியும் செய்யப்படவில்லை. ஒவ்வோா் ஆண்டும் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கல்லீரல் பாதிக்கப்படுவோரும் அதிகரித்து வருகின்றனா்.

இதுதொடா்பான வழக்கில் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

ஆனால், 7 ஆண்டுகளாகியும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான எந்த வசதியும் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாக கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் இடையே கல்லீரல் அறுவைச் சிகிச்சை தொடா்பான ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடா்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவு எப்போது நடைமுறைப்படுத்தப்படும்.

இதுதொடா்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.