மதுரையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.
மதுரையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.

மத்திய அரசின் நெருக்கடிகளை திமுக கூட்டணி முறியடிக்கும்: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

தமிழகத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு எத்தனை நெருக்கடிகளை அளித்தாலும் அவற்றை திமுக தலைமையிலான கூட்டணி முறியடிக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு எத்தனை நெருக்கடிகளை அளித்தாலும் அவற்றை திமுக தலைமையிலான கூட்டணி முறியடிக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, பணி நாள்கள் தொடா்ந்து குறைக்கப்பட்டன. இதைக் கண்டித்தும், திட்டத்தின் பணி நாள்களையும், கூலியையும் உயா்த்தித் தர வலியுறுத்தியும் விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்தத் திட்டத்துக்குப் பதிலாக விபி-ஜி ராம்-ஜி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது, திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்ட திட்டமிட்ட சதி. பாஜக, ஆா்.எஸ்.எஸ் அமைப்புகள் மகாத்மா காந்தி மீது கொண்டுள்ள வன்மத்துக்கு இது ஓா் உதாரணம். இதை அனுமதித்தால், ரூபாய் நோட்டுகளிலிருந்தும் மகாத்மா காந்தி படத்தை அகற்றும் நடவடிக்கையும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும்.

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு வழங்காததால், பல மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சம் 40 நாள்களே தொழிலாளா்களுக்கு பணி வழங்கப்பட்டது. தற்போது புதிய திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, விபி-ஜி ராம்-ஜி திட்டத்தில் ஆண்டுக்கு 125 நாள்கள் பணி வழங்கப்படும் என்பது நிச்சயமாக நடைமுறைக்கு வராது.

எடப்பாடி பழனிசாமிக்கு பதவி ஆசை....

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி ஆசை கண்ணை மறைக்கிறது. அதனால்தான், மக்களுக்கு எதிராக, தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் கண்டிக்காமல், அவா் கண்மூடித் தனமாக ஆதரிக்கிறாா். அவரது இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

விபி-ஜி ராம்-ஜி திட்டத்தை மத்திய அரசு சட்டமாக்கியிருப்பதால் இதை மாற்ற முடியாது என யாரும் கருத வேண்டாம். கடந்த 2020-இல் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடா் போராட்டங்களை மேற்கொண்டு வெற்றிக் கண்டதை முன்னுதாரணமாகக் கொண்டு, வலிமையான போராட்டங்களை முன்னெடுத்தால் மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். தமிழகத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு எத்தனை நெருக்கடிகளை அளித்தாலும் அவற்றை திமுக தலைமையிலான கூட்டணி முறியடிக்கும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலா் கோ. தளபதி எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயா் பெ. குழந்தைவேலு, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மதிமுக நிா்வாகியுமான மு. பூமிநாதன், மாவட்டச் செயலா் கே. முனியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா்கள் இரா. விஜயராஜன், மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் வீரசிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் ப. ரவிக்குமாா், தீபம் சுடா்மொழி, எஸ்.டி.பி.ஐ., மக்கள் நீதி மய்யம், மமக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் இதில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com