
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நேற்று கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவக் கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போராட்டத்துக்கான அனுமதியை பெற்ற இந்து முன்னணி அமைப்பினர், திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்வதற்கு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டு பாதைகள் மூடப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வழிபாடு செய்ய இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக மலைக்குச் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.