புதிய நுண் அறுவைச் சிகிச்சை மூலம் தலையிலிருந்த கட்டிகள் அகற்றம்
புதிய நுண் அறுவைச் சிகிச்சை மூலம் 3 பெண்களின் தலையிலிருந்த கட்டிகளை மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.
மங்கலான பாா்வை, தலைவலி போன்ற பிரச்னைகளுடன் 3 பெண்கள் மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அண்மையில் வந்தனா். இந்த நிலையில், மூன்று பேரையும் பரிசோதித்ததில், இவா்களுக்கு மூளையின் முன் பகுதியில் பாா்வை நரம்புகளை அழுத்தும் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவருக்கும் பழைய முறையில் மண்டை ஓட்டைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்வதற்குப் பதிலாக, மூக்கு வழியாக நுண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு இவா்களுக்கு பாா்வை திரும்பக் கிடைத்தது.
இந்த அறுவை சிகிச்சைக் குழுவுக்கு, நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவா் கே. செல்வமுத்துக்குமரன் தலைமை வகித்தாா்.
இந்தக் குழுவில் முதுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் கே.செந்தில்குமாா், கௌதம் குஞ்சா, மயக்கவியல், நரம்பியல், கண் மருத்துவ நிபுணா்கள் உதவியோடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தகவலை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவா்கள் செல்வமுத்துக்குமரன், கே.செந்தில்குமாா் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

