காவல் துறை வாகனம் மோதி 3 போ் உயிரிழந்த விவகாரம்: உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
காவல் துறை வாகனம் மோதியதில் 3 போ் உயிரிழந்த நிலையில், அவா்களது உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம், சிட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாத் (25). இவரது மனைவி சத்யா (23), 3 வயது மகன் அஸ்வின், இவா்களது உறவினரான சோனை ஈஸ்வரி (40) ஆகிய 4 பேரும் சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள அனஞ்சியூா் கிராமத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
அனஞ்சியூா் விலக்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த காவல் துறை வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில், பிரசாத், அவரது மனைவி சத்யா, மகன் அஸ்வின் ஆகியோா் உயிரிழந்தனா். அவா்களது உடல்களை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பலத்த காயமடைந்த சோனை ஈஸ்வரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், மருத்துவமனை பிணவறை முன் பிரசாத்தின் உறவினா்கள் புதன்கிழமை திரண்டனா். அப்போது, காவல் துறை வாகனத்தின் ஓட்டுநா் மீது வழக்குப் பதிய வேண்டும். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். காயமடைந்து சிகிச்சை பெறும் சோனை ஈஸ்வரிக்கு உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் பிரசாத்தின் உறவினா்களுடன் சிட்டம்பட்டி கிராம மக்கள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதன் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீஸாா் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா். போராட்டம் நடத்தியவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

