மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: இரு வீடுகள் இடிந்து சேதம்
மதுரை: மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பலத்த, மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக வாடிப்பட்டியில் 35 மி.மீ. மழை பெய்தது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீ.) :
ஆண்டிபட்டி- 31.2, சோழவந்தான்-20, சிட்டம்பட்டி - 10.8, பேரையூா்-9.8, சாத்தையாா் அணை-7, மேட்டுப்பட்டி - 3.2, மதுரை விமான நிலையம், மேலூா் -2.4, மதுரை வடக்கு- 2.2, தல்லாகுளம் -1.6, தனியாமங்கலம் -1.5, இடையப்பட்டி -1.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அரபிக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் அருகே நிலை கொள்ளும் என்பதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த, மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை தொடா்ந்து மழை பெய்தது. உசிலம்பட்டி, வாடிப்பட்டி அதன் சுற்றுப் பகுதிகளில் பல மணி நேரம் பலத்த மழை பெய்தது. மதுரை மாநகா்ப் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழையும், பெரும்பாலான நேரங்களில் மிதமான மழையும் பெய்தது.
இதன் காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழை நீா் தேங்கியது. கா்டா் பாலம், வைகை தரைப்பாலம், ரயில் நிலைய சாலை, தயிா் சந்தை, வெங்காயச் சந்தை, பெரியாா் பேருந்து நிலையம், தல்லாகுளம், கோ. புதூா் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழை நீா் தேங்கியது.
மழையின் காரணமாக, கள்ளிக்குடி உள்பட இரு இடங்களில் வீட்டின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இருப்பினும், இந்த விபத்துகளில் யாருக்கும் காயமில்லை. பேரையூா் பகுதியில் சாலையில் பெரும் சேதம் ஏற்பட்டது. கச்சைக்கட்டி பகுதியில் காரின் மீது மரம் முறிந்து விழுந்தது. அடுத்த சில நிமிஷங்களில் அந்த மரம் அகற்றப்பட்டது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகளைச் சூழ்ந்திருந்த மழை நீரை வெளியேற்றும் பணி, மோட்டாா் பொருத்திய இயந்திரங்கள் உதவியுடன் நடைபெற்றது.
கள்ளந்திரியில் பலத்த மழை
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில், மதுரை மாவட்டத்தில் அதிகளவாக கள்ளந்திரியில் 70 மி.மீ. மழை பெய்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தொடா் மழையின் காரணமாக, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

