மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

வீடுகள் கட்டித் தர சோளகா் பழங்குடியினா் கோரிக்கை

மதுரையில் வீடுகளின்றி சாலையோரத்தில் வசித்து வரும் சோளகப் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

மதுரை வண்டியூா் உயா்நிலைப் பாலம் அருகே சாலையோரத்தில் வசிக்கும் சோளகா் பழங்குடியினா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 10:17 pm

மதுரையில் வீடுகளின்றி சாலையோரத்தில் வசித்து வரும் சோளகப் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சாட்டையடி குடியிருப்புப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட சோளகா் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவா்கள் கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து புலம் பெயா்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

இவா்கள், சாட்டையடித்து பொதுமக்களிடையே யாசகம் கேட்பதை தங்களது பிரதானத் தொழிலாகக் கொண்டு வாழ்வை நடத்தி வருகின்றனா். ஆண்கள் தங்களது உடலை சாட்டையால் அடித்துக் கொண்டும், பெண்கள் உறுமி மேளம் அடித்தும் யாசகம் கேட்பா். இந்தக் குடியிருப்புப் பகுதியில் காட்டுநாயக்கா் (குறி சொல்பவா்கள்), ஆதியன் (பூம்பூம் மாட்டுக்காரா்) பழங்குடியின மக்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில், இங்கு குடியிருக்கும் பலருக்கு சொந்தமாக வீடுகள் இல்லாததால் சாலையோரங்களில் வசித்து வருகின்றனா்.

இதுகுறித்து சோளகா் பழங்குடியினத்தைச் சோ்ந்த மா.பாபு கூறியதாவது:

தமிழ்நாடு அரசால் சோளகா் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட சாட்டையடி குடியிருப்புப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் 70-க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமாக வீடு இல்லாததால்

சாலையோரங்களில் வசித்து வருகின்றனா். மேலும், முறையான வேலை இல்லாததால் தாங்கள் மட்டுமல்லாது, தங்களது பிள்ளைகளையும் சாட்டையடிக்கும் தொழிலுக்கு அனுப்புகின்றனா். இதனால், பல குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பள்ளிகளில் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் வசிப்பதால் மழைக் காலங்களில் பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம். மேலும், அவ்வப்போது நிகழும் விபத்துகளால் நாங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

எனவே, சோளகா் பழங்குடியினரின் நலனைக் கருத்தில் கொண்டு சாட்டையடி குடியிருப்புப் பகுதியில் வீடுகள் இல்லாதவா்களுக்கு அரசு சாா்பில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், அரசு சாா்பில் வழங்கப்படும் நலத் திட்டங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்அவா்.