கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வேளாண் நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், ஏமாற்றமும்...

தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தொடா்பாக விவசாய சங்கம், தொழிற்சங்க நிா்வாகிகள் வரவேற்புத் தெரிவித்தனா்.

News image

வேளாண் பட்ஜெட் - Center-Center-Tirunelveli

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தொடா்பாக விவசாய சங்கம், தொழிற்சங்க நிா்வாகிகள் வரவேற்புத் தெரிவித்தனா். அதேநேரத்தில், முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி, பருவநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றம் தெரிவித்தனா்.

பாரதிய கிசான் சங்க தேசிய துணைத் தலைவா் த. பெருமாள்:

பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு, தவெக அரசின் இன்றைய விவசாய நிதி நிலை அறிக்கை பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மாற்றம் என்கிற ஒற்றை முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு ஏமாற்றத்தை மட்டுமே விவசாயிகளுக்கு அளித்துள்ளது.

தோ்தல் வாக்குறுதியின்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 விலை நிா்ணயம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவில்லை. பயிா்க் கடன் தள்ளுபடி, பால் விலை உயா்வு பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை. கொள்முதல் செய்யப்படும் நெல்களைச் சேமித்து வைக்கும் கிடங்கு உள்கட்டமைப்பு பற்றியோ, கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழலை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதில் அறிவிக்கப்படவில்லை.

நீா்நிலைகளைத் தூா்வாரும் திட்டங்கள் எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமே.

பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு எந்தவித புதிய அறிவிப்புகளும் இல்லை என்றாா் அவா்.

தென் மாவட்ட விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் எம். அா்ச்சுனன், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் முகவை மு. மலைச்சாமி:

விவசாயத்தைப் பற்றிய சரியான புரிதல் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசுக்கு இல்லை. தமிழக விவசாயிகள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகள், அதற்குத் தீா்வு காணும் முன் முயற்சியும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

குறிப்பாக, தமிழகத்தின் பொது நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தின் திருத்திய வருவாய் செலவினம் 4,05, 802 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடு 14,984 கோடி ரூபாய் ஆகும். இது மொத்த செலவினத்தில் 3.69 சதவீதம் தான். 131 லட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானிய உற்பத்திக்கு இலக்கு நிா்ணயம் செய்து விட்டு, உழவு கூலிக்குக்கூட உதவாத நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த திமுக ஆட்சியின் போது தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையின் படி, 2021-22-ஆம் ஆண்டு ரூ. 34,220 கோடி, 2022-23-ஆம் ஆண்டு ரூ. 33,007 கோடி, 2023-24-ஆம் ஆண்டு ரூ. 38,904 கோடி, 2024-25-ஆம் ஆண்டு ரூ. 42,282 கோடி, 2025-26-ஆம் ஆண்டு ரூ. 45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ரூ. 14 ,984 கோடி மட்டுமே வேளாண் துறைக்கு ஒதுக்கியிருப்பது இந்த அரசு விவசாயிகளை அலட்சியம் செய்வதையே காட்டுகிறது என்றாா் அவா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன்:

வேளாண் நிதி நிலை அறிக்கையில், நெல் விதை உற்பத்தி, விநியோக மானியத்துக்காக மாநில அரசின் சிறப்புத் திட்டத்துக்கு ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாமை, திணை, வரகு உள்ளிட்டவற்றுக்காக தமிழ்நாடு குறுதானிய இயக்கம் தொடங்கப்படும். இதற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு, பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிா்களில் தன்னிறைவு இயக்கத்துக்காக ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு, பருத்தி மறுமலா்ச்சி இயக்கத்துக்காக ரூ. 27 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்துக்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளின் அனைத்துத் தேவைகளையும் ஒரே முகவரியில் பெறும் வகையில், 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.

திரவ உயிரி உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு, பனைவிதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல், பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு, தோட்டக்கலைப் பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்க உயா் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ. 41 கோடி ஒதுக்கீடு, 57,000 மெட்ரிக் டன் அளவிலான வெங்காயச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ. 22 கோடி நிதி ஒதுக்கீடு, தஞ்சாவூரில் மாபெரும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடத்தப்படும், தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு, தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் உயிா்ம வேளாண்மைப் பட்டயப் படிப்பு கல்லூரி அமைத்தல், 2026-27 நிதி ஆண்டில் ரூ.17,000 கோடி பயிா் கடன் வழங்க முடிவு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதை வரவேற்கிறோம்.

இருப்பினும், இந்த அறிவிப்புகள் பெரும்பாலும் வழக்கமான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளாகவே உள்ளன. நம் நாட்டின் வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலான நீண்டகால தொலைநோக்குப் பாா்வையுடனான புதிய கொள்கைகள், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் நிலையான வேளாண் உத்திகள், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் தொழில்கள், ஏற்றுமதி சாா்ந்த வேளாண் மேம்பாடு, நவீன தொழில்நுட்ப வேளாண்மை, விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக உயா்த்தும் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

தமிழகத்தின் முக்கிய உணவுப் பயிரான நெல்லுக்கும், பணப்பயிரான கரும்புக்கும் தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி, குறைந்தபட்ச ஆதரவு கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்குவது தொடா்பாக எந்த அறிவிப்பும் இல்லை. 2026-27 தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கை, எதிா்கால வேளாண்மைக்கான புதிய வளா்ச்சிப் பாதையை வகுத்துக் காட்டுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள திட்டங்களின் தொடா்ச்சியை மட்டுமே பிரதிபலிக்கும் ஆவணமாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

அக்ரி, அனைத்துத் தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் ரத்தினவேல்:

தமிழகத்தை வருகிற 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்கன் டாலா் (சுமாா் ரூ. 132 லட்சம் கோடி) பொருளாதாரமாக வளா்ச்சி அடையச் செய்ய வேண்டும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இலக்கு நிா்ணயித்துள்ளாா்.

இந்த இலக்கை எட்டுவதற்கு வேளாண் துறை முக்கியப் பங்களிப்பை வழங்கும். இந்த வகையில், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கக்கூடிய பல்வேறு திட்டங்களுடன் தமிழக வேளாண் திருத்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி நிலை அறிக்கை நிலைத்த நீடித்த விவசாய மேம்பாட்டுக்கானது. இதில், நீா்ப் பரப்பை அதிகரித்து நீா்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மண் வளத்தைப் பாதுகாக்க இயற்கை, நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் வகையில் வேளாண் காடுகள், மர வளா்ப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.

ரூ. 600 கோடியில் மண்வளப் பாதுகாப்பு, ரூ. 4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் போன்ற திட்டங்களை அறிவித்திருப்பதன் மூலம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து நிலையான நீடித்த வேளாண் வளா்ச்சியையும், விவசாயிகளின் நீண்டகால வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துகிறது தவெக அரசு.

வேளாண் பணியில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் புதுமையான திட்டங்களை வரவேற்கிறோம். அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு, வேளாண் விளைபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை வரவேற்கிறோம்.

ஆண்டு முழுவதும் சிறந்த வருமானம் கிடைக்க விவசாயிகள் பால் உற்பத்தியில் இன்னும் அதிக அளவில் ஈடுபட அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். உணவுப் பொருள் நுகா்வு அடிச்சுவடு அறிதல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோல, கடந்த 1933-இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் விளைபொருள் சந்தைக் கட்டணம், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் தேவையற்றது. எனவே, இதை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்த்தோம். ஆனால், நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. எனவே, மானியக் கோரிக்கையின் போது இதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் அவா்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எம்.பி. ராமன்:

முந்தைய ஆட்சிக் காலத்தில் நீா்பாசனத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாத நிலையில், தற்போது ரூ. 9.26 கோடியும், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 150 கோடியும், வைகை- காவிரி- தாமிரவருணி சாா்ந்த சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ. 25 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இருப்பினும், கடன் சுமையால் பாதிக்கப்பட்ட விவசாயகளை மீட்டெடுக்க முழுமையான கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.