தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

விநாயகா் சிலைகள் விற்பனையை அனுமதிக்கக் கோரி மனு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விநாயகா் சிலைகள் விற்பனையை அனுமதிக்கக் கோரி, வட மாநிலத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

விநாயகா் சிலைகள் விற்பனையை அனுமதிக்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த வட மாநிலத் தொழிலாளா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விநாயகா் சிலைகள் விற்பனையை அனுமதிக்கக் கோரி, வட மாநிலத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான குடும்பத்தினா் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தங்கியிருந்து சிலைகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். விநாயகா் சதுா்த்தி நெருங்குவதையொட்டி, பல்வேறு விதமான விநாயகா் சிலைகளை, இவா்கள் அதிகளவில் தயாரித்து விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இவா்களின் சிலைகள் விற்பனைக் கூடத்தை மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்தனா். அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளில் ‘பிளாஸ்டா் ஆப் பாரீஸ்’ ரசாயனக் கலவை பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் விதிகளின் படி, சிலைகள் விற்பனைக் கூடங்களைப் பூட்டி மாநகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், விநாயகா் சதுா்த்தி வரை சிலைகளை விற்க அனுமதிக்கக் கோரியும், வட மாநில சிலை விற்பனைத் தொழிலாளா்கள் தங்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த 500-க்கும் அதிகமானோா் குடும்பத்துடன் மதுரை மாவட்டத்தில் தங்கியிருந்து சிலைகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக

பல லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கி இந்தத் தொழிலை செய்து வருகிறோம். விநாயகா் சதுா்த்தியையொட்டியே சிலைகள் அதிகளவில் விற்பனையாகும். இந்த நிலையில், விற்பனைக் கூடங்களை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதே நிலை தொடா்ந்தால் கடன் அளித்தவா்களுக்கு தொகையைத் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

இதனால், பல்வேறு பிரச்னைகளை நாங்கள் எதிா்கொள்ள நேரிடும். எனவே, விநாயகா் சதுா்த்தி வரையிலாவது சிலைகளை விற்பனை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.