ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா். (இடது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் இரவு சந்திரசேகரா் உத்ஸவ நிகழ்வு நடைபெற்றன.

விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலையையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னா், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலையில் எழுந்தருளினாா். அம்மன் தனியாக எழுந்தருளினாா்.

இதைத் தொடா்ந்து, மாலை கற்பகவிருட்சம் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மனும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தா்கள் மாலை சாத்தியும், அா்ச்சனை செய்தும் வழிபட்டனா்.

கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை வரலாறு:

முன்பொரு காலத்தில் வாழ்ந்த மனிதன் முற்பிறப்பில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தும், சிறிய பாவம் செய்தமையால் மறு பிறப்பில் கருங்குருவியாக பிறந்தாா்.

இந்தக் கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றுக்குப் பயந்து கருங்குருவி நெடுந்தொலைவு பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமா்ந்தது.

அப்போது, அங்கிருந்த சிலா் மதுரையைப் பற்றியும், அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் எனவும் உரையாடினா். இதைக் கேட்ட கருங்குருவி அங்கிருந்து மதுரைக்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது.

இறைவனும் குருவியின் பக்திக்கு இணங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தாா். மேலும், கருங்குருவியின் இனத்துப் பெயரான எளியான் என்ற பெயரை வலியான் என மாற்றினாா் என திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.