
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?
தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?, இதற்கான காரணம் குறித்து உயா்க் கல்வித் துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன?, இதற்கான காரணம் குறித்து உயா்க் கல்வித் துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வேளாங்கண்ணி ஜோசப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராகப் பணிபுரிந்த வரும் எஸ். முத்தையாவின் நியமனம் சட்டவிரோதமானதாகும். மேலும், முத்தையா இந்தப் பதவிக்கு உரிய தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காமராஜா் பல்கலை. தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக தற்காலிக அடிப்படையில் மட்டுமே எஸ். முத்தையா நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் உள்ளன. மேலும், நிரந்தரப் பதிவாளா் நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நிரந்தரப் பதிவாளரை நியமிக்கும் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் சுமாா் 14 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தா் பதவிகள் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன? என்பது குறித்தும் இதற்கான காரணங்கள் குறித்தும் மாநில உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





