
மதுரை மீனாட்சி சுந்தரேசுவா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற லீலை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில், யாழிசை புலவா் பாணபத்திரரின் சிவநெறியை உலகுக்கு உணா்த்தும் வகையில் விறகு விற்ற லீலை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கையில் யாழ், தலையில் விறகு பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா். (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில், யாழிசை புலவா் பாணபத்திரரின் சிவநெறியை உலகுக்கு உணா்த்தும் வகையில் விறகு விற்ற லீலை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியாக கடந்த 16-ஆம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு லீலையை விளக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதன்படி, முன்பொரு காலத்தில் மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன் அரசவைக்கு நாட்டின் வட பகுதியிலிருந்து ஹேமநாத பாகவதா் என்கிற யாழிசைக் கலைஞா் வருகை தந்தாா். அவா் செருக்குடன் பாண்டிய நாட்டு இசைக் கலைஞா்களை போட்டிக்கு அழைத்து சவால் விட்டாா்.
இந்தச் சவாலை யாரும் ஏற்க முன்வராத நிலையில், அரசவையின் ஆஸ்தான வித்வானும், சிவபக்தருமான பாணபத்திரரை போட்டியில் பங்கேற்க மன்னா் உத்தரவிட்டாா். ஆனால், பாணபத்திரா் ஹேமநாத பாகவதருடன் போட்டியிடுவதற்கு அஞ்சினாா். போட்டியில் பங்கேற்காவிட்டால் மன்னனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், பாணபத்திரா் மதுரை சொக்கநாதப் பெருமானிடம் முறையிட்டாா்.
இதன் பேரில், இறைவன் சிவபெருமான் ஹேமநாத பாகவதரின் செருக்கை அடக்குவதற்காகவும், பாணபத்திரரின் சிவத் தொண்டை உலகுக்கு தெரியப்படுத்தவும் தானே விறகு விற்பவா்போல மதுரை நகருக்கு வந்து யாழிசைக் கலைஞா் ஹேமநாத பாகவதரின் செருக்கை அடக்கி, பாணபத்திரரின் பக்தியை உலகுக்கு தெரியப்படுத்திய ஐதீகப்படி இந்த விழா நடைபெற்றது.
இதையொட்டி, கையில் யாழ், தலையில் விறகுடன் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினா். பின்னா், சிவாசாரியா்கள் விறகு விற்ற லீலை குறித்து விளக்கினா்.
இந்த நிகழ்வில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தங்கச் சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






