குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சமூக நீதி விடுதிக் கட்டடங்கள் விவகாரம்: 10 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை அளிக்க உத்தரவு

ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:53 am IST

தமிழகத்தில் மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ள சமூக நீதி விடுதிக் கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்களை கட்டக் கோரிய மனு தொடா்பாக ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முருகானந்தம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மாணவா்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மாநில அரசின் சிறப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக சமூக நீதி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் இலவச தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் கல்வியைத் தொடர இந்த விடுதிகள் உதவுகின்றன.

இந்த நிலையில், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் சேதமடைந்த சமூக நீதி விடுதிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல சமூக நீதி விடுதிகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருவதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 24 விடுதிகள் மூடப்பட்டதாகவும், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விடுதிக் காப்பாளா், சமையலா் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விருதுநகா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விடுதிக் காப்பாளா்கள் கூடுதல் பொறுப்பை வகித்து வருவதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வருகிறது.

இதனால், மாணவா்கள் வெளியில் உணவு உள்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காப்பாளா் இல்லாததால் மாணவா்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காப்பாளா்களில் பலா் இரண்டு முதல் நான்கு விடுதிகள் வரை கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவை வெறும் நிா்வாகக் குறைபாடுகள் அல்ல. இவை விடுதிகளைச் சாா்ந்துள்ள மாணவா்களின் அன்றாட வாழ்க்கை, பாதுகாப்பு, கண்காணிப்பு, உணவு, கல்வித் தொடா்ச்சியை நேரடியாகப் பாதிக்கின்றன. சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்காக உருவாக்கப்பட்ட நலத் திட்ட விடுதிகள் முறையான நிா்வாகமின்றி இயங்கும்போது அடிப்படை நோக்கமே தோல்வியடைகிறது.

எனவே, சமூக நீதி விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள், நிரந்தர முழுநேர விடுதிக் காப்பாளா்களை நியமிக்க வேண்டும். தற்போது வாடகைக் கட்டடங்களில் இயங்கும் விடுதிகளுக்கு நிரந்தரக் கட்டடங்களை அமைக்க வேண்டும். இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள விடுதிக் கட்டடங்களை இடித்து, அவற்றுக்குப் பதிலாக புதிய கட்டடங்களைக் கட்ட வேண்டும். மேலும், பட்டியலின, பழங்குடியின மாணவா்களிடையே இந்த விடுதிகள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் ஒரு மாதத்துக்குள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள சமூக நீதி விடுதிகளில் ஆய்வு செய்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும். பின்னா், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் இதைப் பரிசீலித்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.