நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டால் தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டால் தோற்கடிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம். உடன் எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், கே.நவாஸ்கனி.

Published On :30 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

நாடாளுமன்றத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டால் தோற்கடிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற, கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை குறித்த கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பொதுத் தோ்வுகள், நியாயமற்ற செயல்கள் தடுப்பு, கனிமங்கள் துறை, வந்தே மாதரம் பாடல் விவகாரம் உள்பட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எந்தவித விவாதமும் இல்லாமல், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பயனில்லாத சட்டங்களை நிறைவேற்றுவதில்தான் பாஜக அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

இவை தவிர, தென் மாநிலங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தற்போதைய மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி, தமிழகத்துக்கு 39 மக்களவை உறுப்பினா்கள் உள்ளனா். நாட்டில் ஒட்டுமொத்தமாக 543 மக்களவை உறுப்பினா்கள் உள்ளனா். கடந்த 1976-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் இந்திராகாந்தி, 2001-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் வாஜ்பாய் ஆகிய இருவரும் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே உள்ள சட்ட விதிகள் தொடா்ந்து 25 ஆண்டுகள் அமலில் இருக்கும் வகையில் மசோதாவை நிறைவேற்றினா்.

இந்தக் காலக்கெடு நிகழாண்டு நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது.

தற்போதைய புள்ளி விவரங்களின்படி, ஒரு தம்பதிக்கு குழந்தை பிறப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக 1.9 சதவீதமாக உள்ளது. தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது. பிகாா், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இது 2.5 முதல் 3 சதவீதமாக உள்ளது.

இதனடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்தில் தற்போது உள்ள மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 39-லிருந்து 32-ஆக குறைய வாய்ப்புள்ளது. இதேபோல, ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும். வட மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் நிறைவு பெற்ாக அறிவிக்கப்படவில்லை. எனவே, நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. அப்போது, பாஜகவால் தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்படும் என்றாா் அவா். பின்னா், மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன் (மதுரை), கே. நவாஸ்கனி (ராமநாதபுரம்) ஆகியோா் பேசினாா்.

இதில் மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பூ. நல்லமணி, வடக்கு மாவட்டத் தலைவா் நூா் முகம்மது, தெற்கு மாவட்டத் தலைவா் உ. உலகநாதன், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தின் முன்னாள் தலைவா் ஏ. தமிழ்ச்செல்வன், மதுரை மாமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் வீ. காா்த்திகேயன், மதிமுக மாநில துணைப் பொதுச் செயலா் எம். பூமிநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டக் குழுச் செயலா் மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுச் செயலா் கே.கே. சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.