மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மீண்டும் "தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவை' தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இண்டி கூட்டணியின் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தில்லியில் புதன்கிழமை கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், வி. வைத்திலிங்கம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதிமுக எம்.பி. துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், ஐயுஎம்எல் எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி. சு. வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு ஆயத்தமாகியுள்ளது. அதன் விளைவுகள், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் அதிகார பங்கீட்டு உரிமையைக் கடுமையாகப் பாதிக்கும். நாடு முழுவதும் சிறுபான்மையினர் வாக்காளர்கள் தாக்கம் ஏற்படுத்தும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா அமைய உள்ளதாக எங்களால் அறிய முடிகிறது.
இதை எதிர்கொள்வது குறித்தும் தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமை சார்ந்த விஷயத்தில் துளியளவும் சமரசத்துக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தவும், "இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து இத்தகைய கூட்டங்களை நடத்துவோம் என்றார்.
திமுகவின் நிலைப்பாடு?:
இதற்கிடையே, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவிடம் கேட்டதற்கு, "மசோதாவில் என்ன உள்ளது என்பதை அறியாமலேயே அது குறித்து எவ்வாறு கருத்து தெரிவிப்பது?' என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு தொடர்புபடுத்தும் வகையில் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை திமுக கடுமையாக எதிர்த்தது. இம்முறை இந்த மசோதா தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அலுவல்பூர்மற்ற வகையில் பேசி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா மற்றும் 131-ஆவது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா மூலம் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 800-க்கும் மேலாக உயர்த்தவும், தமிழகத்தின் இடங்களை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்ட தீர்மானம், மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான பெரும்பான்மை பலம் மத்திய அரசுக்குக் கிடைக்கவில்லை. இந்த மசோதா, மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவப் பங்கு மற்றும் அதிகாரப் பங்கீட்டு உரிமை பாதிக்கப்படும் என்றும், சிறுபான்மையினரின் வாக்குத் தாக்கம் குறையும் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, 2029 மக்களவை தேர்தலுக்கு முன் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் என்றும், எந்த மாநிலத்தின் உரிமையும் பாதிக்கப்படாது என்றும் விளக்கமளித்து அதை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்: ஆளும் பாஜக கூட்டணி ஆலோசனை

மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்பில் உறுதி: காங்கிரஸ்

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, சரத்பவாா் கட்சியின் ஆதரவை பெற பாஜக முயற்சி: ப.சிதம்பரம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



