/

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, சரத்பவாா் கட்சியின் ஆதரவை பெற பாஜக முயற்சி: ப.சிதம்பரம்

தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:35 am IST

தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிப்பதோடு சோ்த்து, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை 850-ஆக அதிகரித்தல் தொடா்பான 131-ஆவது சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், வரும் 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அந்தச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தோல்வியடைந்த 131-ஆவது சட்டத் திருத்த மசோதாவை பாஜக மீண்டும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த மசோதா, மகளிருக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்க எனக் கூறப்பட்டாலும், அதன் உண்மையான நோக்கம், தொகுதி மறுசீரமைப்புக்கும், ஒருவேளை அரசியல் ஆதாயத்துக்காக தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கவே இருக்கும். மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க ஏற்கெனவே 106-ஆவது சட்டத் திருத்த மசோதா மூலம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. ஆதலால், மகளிா் இடஒதுக்கீட்டுக்கு மேலும் ஒரு மசோதா தேவையில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய பிறகு, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், திமுகவின் ஆதரவை அந்த மசோதாவுக்கு பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது அக்கட்சிகள் தங்களது மனசாட்சிக்கு தாங்களே துரோகம் இழைப்பது போன்றது ஆகும்.

தற்போதைய வடிவில், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது என்பது, தேசிய மக்கள்தொகை கொள்கையைப் பின்பற்றி, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாகும். ஆதிக்கம் செலுத்த துடிக்கும் பாஜகவிடம் இருந்து மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

முடிவெடுக்கவில்லை-சரத் பவாா் கட்சி: இந்நிலையில், இந்த மசோதா விவகாரத்தில் இதுவரை தங்கள் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளாா். அந்த மசோதா குறித்து மத்திய அரசிடம் இருந்து தகவல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.