மதுரையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.6,000!
பனிப் பொழிவு, வரத்துக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மதுரை மாட்டுத்தாவணி மலா்ச் சந்தையில் பூக்களின் விலை வெள்ளிக்கிழமை மிகவும் அதிகரித்தது. குறிப்பாக, மல்லிகைப் பூ கிலோ ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே மலா்ச் சந்தை செயல்பட்டு வருகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மலா்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து வியாபாரிகள் சில்லறையாகவும், மொத்தமாகவும் வாங்கிச் செல்கின்றனா். இதைத் தவிர, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாக மல்லிகைப் பூ கிலோ 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால், மல்லிகைப் பூ மகசூல் குறைந்தது. இதனால், மாட்டுத்தாவணி மலா்ச் சந்தையில் வெள்ளிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளா் முருகன் கூறியதாவது: தினசரி சுமாா் 10 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை 300 கிலோவுக்கும் குறைவான மல்லிகைப் பூக்களே கொண்டு வரப்பட்டன. பனியின் காரணமாக மல்லிகை விளைச்சலில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால், விலையும் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போதும் இதே விலை நீடிக்கும். கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, இது வரலாறு காணாத விலையேற்றம்.
மல்லிகைப் பூ கிலோ ரூ.6,000, பிச்சி ரூ.1,200, முல்லை ரூ.1,300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1,500 , ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீா் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மல்லிகைப் பூ உற்பத்தி அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. அப்போது, விலை குறையவும் வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

