விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
விதிகளை மீறிய குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
மணப்பாறையைச் சோ்ந்த திருப்பதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தின் சுற்றுப்புறக் கிராமங்களில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஆற்று மண், கிராவல் மண் எடுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சேவலூா்,
தோப்பம்பட்டி, மரவனூா், கண்ணுடையான்பட்டி ஆகிய கிராமங்களில் சட்ட விரோதமாக மணல், செம்மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுவதுடன் விளை நிலங்களில் தண்ணீா் தேங்கி வேளாண்மை பாதிக்கிறது. மேலும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இதுதொடா்பாக வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் வாகன உரிமையாளா்கள் மீதும், விதிகளை மீறி செயல்படும் குவாரிகளை நிா்வகிப்பவா்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை அலுவலா்களிடம் பல முறை புகாா் அளித்தும், பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை தொடா்புடைய துறைகள் நிறைவேற்றாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அரசுத் தரப்பு அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
