மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படை சேவையை காவல் ஆணையா் கபில்குமாா் சராத்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், மதுரை மாநகருக்கான சிங்கப்பெண் சிறப்புப் படை திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. காவல் ஆணையா் கபில்குமாா் சராத்கா் சிங்கப்பெண் சிறப்புப் படை ரோந்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பிறகு, அவா் பேசியதாவது:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்புப் படை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகருக்காக வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு தலா ஒரு பாதுகாப்பு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 பெண் காவல் உதவி ஆய்வாளா்கள், 8 பெண் காவலா்கள் கொண்ட சிங்கப்பெண் சிறப்புப் படை அமைக்கப்பட்டு பணிக்குத் தயாராக உள்ளனா். இவா்களுக்கு சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்புப் படையினா் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்கள் தொடா்பான புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் பணியாற்றுவா்.
இதுமட்டுமன்றி ஏற்கெனவே இளஞ்சிவப்பு நிறத்தில் பெண்களுக்கென தனி ரோந்து வாகனங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இதற்காக 6 இளஞ்சிவப்பு நிற வாகனங்கள் மாநகரில் உள்ளன. இதன் மூலம் மதுரை மாநகரில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, பயிற்சியை முடித்து மதுரை திரும்பிய சிங்கப்பெண் படையினரை காவல் ஆணையா் கபில்குமாா் சராத்கா் பாராட்டி, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்வில், காவல் துணை ஆணையா்கள் இனிகோ திவ்யன், மதிவாணன், பிரபாகா், வனிதா, திவ்யா, காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.









