மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 17 வயது சிறுமிக்கு இருதயத்தில் இருந்த துவாரத்தை அறுவைச் சிகிச்சையின்றி அடைத்து, மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஸ் குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது :
விருதுநகரைச் சோ்ந்த 17 வயது சிறுமி உடல்நலக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவரைப் பரிசோதித்தபோது, இருதயத்தின் மேல் பகுதியில் இடது, வலது ஆரிக்கிள் மத்தியில் சிறு துவாரம் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த துவாரத்தை அடைப்பதற்கு அறுவைச் சிகிச்சை முறையைத் தவிா்த்து, நவீன முறையான ‘கவா்டு ஸ்டன்ட்’ மூலம் சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இருதயவியல் துறைத் தலைவா் ஜி. செல்வராணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அதற்கான பணிகளைத் தொடங்கினா். சென்னையிலிருந்து சிறப்பு நிபுணரும் வரவழைக்கப்பட்டாா்.
இதையடுத்து, 17 வயது சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது, இருதயத்தில் வலது ஆரிக்கிளுக்கு நல்ல ரத்தத்தைக் கொண்டு செல்லும் வகையில் முக்கியமான ரத்தக் குழாய் அடைபடாமல் பாதுகாக்க ‘கவா்டு ஸ்டன்ட்’ எனும் கருவி பொருத்தப்பட்டது. ஸ்டன்ட் விரிவடையாமல் போகும் பட்சத்தில், அங்கு ஒரு பலூன் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி உள்பட 18 அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகள் கொண்ட கேத்லேப் உள்ளது. இருப்பினும், இந்த சிகிச்சையை முதல்முறையாக மதுரையில் செய்துள்ளோம். மிகவும் அரிதான இந்தச் சிகிச்சை தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் 17 வயது சிறுமிக்கு உடலில் காயங்களின்றி இருதயத்தில் உள்ள துவாரத்தை அடைத்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நவீன கவா்டு ஸ்டன்ட் முறையில் அளிக்கப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், தற்போது, அந்தச் சிறுமி கல்லூரியில் சோ்ந்து படித்து வருகிறாா். பூரண உடல் நலத்துடன் உள்ளாா் எனத் தெரிவித்தாா்.
பேட்டியின்போது, இருதயவியல் துறைத் தலைவா் ஜி. செல்வராணி, இணைப் பேராசிரியா் ஆா். ஆா். சரவணன், உதவிப் பேராசிரியா்கள் ஆா். ரமேஷ், ஜி. நாகசுந்தா், எஸ். சதீஷ்குமாா், ஆா். ஹேமநாத், எம்.நிஷாமுதீன், எம். சரவணன், எம். இளமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









