போலீஸாா் விசாரணையில் இளைஞா் உயிரிழப்பு: 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு


மானாமதுரையில் போலீஸாா் விசாரணையின் போது இளைஞா் உயிரிழந்த விவகாரம் தொடா்பான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் 60 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சியோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு உணவகம், கோழிக் கடையில் பணிபுரியும் தொழிலாளா்களான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் வாளால் வெட்டியதாக மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், அதே பகுதியைச் சோ்ந்த குணா ஆகியோரை மானாமதுரை போலீஸாா் தேடி வந்தனா்.
மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க போலீஸாா் அங்கு சென்றபோது, தப்பியோட முயன்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணன், தனது மகன் உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினா் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பாதுகாக்க வேண்டும். நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி முன்னிலையில் உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் என்ற டெலிசன் உயிரிழப்பு தொடா்பான வழக்கு எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் படி மாறுதல் செய்யப்பட்ட அறிக்கை அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் 60 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...