நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சாலைகள் புதுப்பிப்புப் பணிகளில் முறைகேடு: மாநகராட்சி ஆணையா் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

மதுரையில் சாலைகள் புதுப்பிப்புப் பணிகளில் முறைகேடு தொடா்பாக மாநகராட்சி ஆணையா், தலைமைப் பொறியாளா், ஒப்பந்ததாரா் ஆகியோா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

மதுரையில் சாலைகள் புதுப்பிப்புப் பணிகளில் முறைகேடு தொடா்பாக மாநகராட்சி ஆணையா், தலைமைப் பொறியாளா், ஒப்பந்ததாரா் ஆகியோா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் புதுப்பிப்புப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே உள்ள பழைய தாா்ச்சாலையை முறையாகப் பெயா்த்து எடுக்காமலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், பழைய சாலையின் அகலத்தைக் குறைத்து புதிய சாலை அமைக்கப்பட்டது.

இதனால், சாலைகளின் உயரம் அதிகரித்து, சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் பள்ளமாகி, மழைக்காலங்களில் மழைநீா் வீடுகள், கடைகளுக்குள் செல்கிறது.

எனவே, சாலை புதுப்பிப்புப் பணிகளின் தரம், அகலம், தடிமன், உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களுக்கான நிலுவைத் தொகை, இறுதிப் பணம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். இதில் தவறு செய்யும் ஒப்பந்ததாரா்கள், மாநகராட்சி அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சாலைகள் தற்போது முறையாக அமைப்பது கிடையாது. ஏற்கெனவே போடப்பட்ட சாலைக்கு மேல் தாரை ஊற்றிவிட்டு சாலை போடுவதாக கணக்குக் காட்டுகின்றனா். பழைய சாலையை பெயா்த்தெடுத்தப் பின்னா்தான் புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இவ்வாறு சாலைகள் அமைத்தால், எதிா்காலத்தில் மதுரையைக் கண்டுபிடிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உயா்நீதிமன்ற உத்தரவு உள்ளது. அரசின் விதிகளும் உள்ளன. நீதிமன்ற உத்தரவைத்தான் அலுவலா்கள் நிறைவேற்றுவதில்லை. சம்பந்தப்பட்ட துறையின் தலைமைச் செயலா் உத்தரவைக்கூட நிறைவேற்ற மாட்டீா்களா?. நீதிமன்றத்துக்குத்தான் மரியாதை இல்லை. தலைமைச் செயலா் உத்தரவுக்கும் மரியாதை இல்லையா?. முதல்வா், பிரதமா் என முக்கிய பிரமுகா்கள் வருகை தந்தால், இரவோடு இரவாக சாலைகள் அமைக்கப்படுகின்றன. நல்ல தரமான சாலை வேண்டுமென்றால் ஒவ்வொரு வாரமும் முதல்வா், பிரதமா் வரவா முடியும் என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மதுரை மாநகராட்சியில் சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரா், இந்தப் பணியைக் கண்காணித்த அலுவலா், மாநகராட்சியின் தலைமைப் பொறியாளா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி ஒப்பந்தப்புள்ளி விவரம், எவ்வளவு தொகையில் சாலை அமைக்கப்பட்டது, அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.