மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: கைதானவரின் பிணை மனு தள்ளுபடி

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் கைதான நபா் பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் கைதான நபா் பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு தனியாா் மருத்துவமனைக்கு அரையாண்டு சொத்து வரியாக ரூ.7 லட்சம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வரியை ரூ.3.13 லட்சமாக குறைத்து போலியான ஆவணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிகழாண்டில் மதுரை மாநகராட்சியின் தணிக்கை அலுவலரிடம் அந்த ஆவணத்தை வழங்கியபோது, இது மாநகராட்சி அலுவலரால் வழங்கப்படவில்லை எனவும், போலியானது எனவும் தெரியவந்தது.

இதுதொடா்பான வழக்கில் மதுரை வடக்கு 2-ஆவது மண்டலத் தலைவா் புவனேஷ்வரியின் கணவா் சரவணன் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பிணை கோரி சரவணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்புடைய மருத்துவமனை நிா்வாகம் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. காரணம் குறிப்பிடாமல் திடீரென என்னைக் கைது செய்தனா். கைதுக்கு பிறகே தொடா்புடைய மருத்துவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

எனவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளி சங்கா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.