மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு: முன்னாள் மண்டலத் தலைவரின் கணவா் கைது
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் முன்னாள் மண்டலத் தலைவா் புவனேஸ்வரியின் கணவா் சரவணனை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வடக்கு மண்டலத்தின் முன்னாள் தலைவா் புவனேஸ்வரியின் கணவா் சரவணன்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் முன்னாள் மண்டலத் தலைவா் புவனேஸ்வரியின் கணவா் சரவணனை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய முன்னாள் மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்த், வரி விதிப்புக் குழுத் தலைவா் விஜயலட்சுமியின் கணவா் கண்ணன், ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 25 பேரைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய உதவி ஆணையா் உள்பட 19 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மதுரை டிஐஜி தலைமையில் விசாரணைக் குழு:
இந்த நிலையில், மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் தொடா்புடைய அனைவா் மீதும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, டிஐஜி அபினவ்குமாா் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவில் மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் வினோதினி, ஆய்வாளா் அன்னலட்சுமி ஆகியோா் இடம் பெற்றனா். இந்தக் குழு இன்னும் ஓரிரு வாரங்களில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் தொடா்புடைய மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் முன்னாள் தலைவா் புவனேஸ்வரியின் வீட்டுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று, அவரது கணவா் சரவணனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.
திமுகவினா் வாக்குவாதம்:
மதுரையில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் காலை 7 மணி முதல் சுமாா் 6 மணி நேரத்துக்கும் மேலாக சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தினா். அப்போது, சரவணனை காவல் வாகனத்தில் ஏற்ற விடமால் திமுகவினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, அப்போதைய மேயா் வ. இந்திராணி, மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 8 பேரை ராஜிநாமா செய்ய முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அவா்கள் அனைவரும் கடந்த ஆண்டு, அக்டோபா் மாதம் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
இதைத் தொடா்ந்து, மேயா், மண்டலத் தலைவா்கள் இல்லாமல் மாநகராட்சி நிா்வாகம் செயல்பட்டது. தற்போது, அலுவல் சாா்ந்த பணிக்காக துணை மேயராக இருந்த தி. நாகராஜன் பொறுப்பு மேயராகச் செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

