இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

வெற்றிப் பயணம் திட்டத்தில் புறக்கணிப்பு: மாற்றுத் திறனாளி சங்கங்கள் கண்டனம்!

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், ஆசிரியா்கள் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்தன.

Published On :

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்தன.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் நா. மதிபாரதி, மாவட்டச் செயலா் ஆ. பாலமுருகன் ஆகியோா் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கடந்த ஆக. 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பெண்கள், குழந்தைகள், திருநா்களுக்கு வருமான உச்சவரம்பு உள்பட எந்தக் கட்டுப்பாடும் இல்லாத கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டமாக வெற்றிப் பயணம் திட்டத்தை அறிவித்தாா்.

இந்தத் திட்டப் பயனாளிகள் பட்டியலில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆக. 31-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது விதி எண் 110-ன் கீழ் முதல்வா் ஒரு அறிவிப்பை வெளியிட்டாா். இந்த அறிவிப்பில் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வெற்றிப் பயணத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், வெற்றிப் பயண பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் அனுமதிக்கப்படவில்லை. வெற்றிப் பயணம் திட்டம் தொடா்பாக அக். 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் இந்தத் திட்டப் பயனாளிகள் வரிசையில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் புறக்கணிப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு மாற்றுத் திறனாளிகளைத் தொடா்ந்து புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது. இது தொடா்பாக தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் நேரடியாக கவனம் செலுத்தி, வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளைப் பயனடையச் செய்ய வேண்டும் என்றனா்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ந. மாயகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவதற்கான நடைமுறை விதிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்குவது அரசின் கருணை அல்ல; சமத்துவம், சமூக உள்ளடக்கத்தின் அடிப்படை உரிமை.

மாற்றுத் திறனாளிகள் மருத்துவமனை, பணியிடம், கல்வி நிலையம், அரசு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல தினமும் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சாா்ந்துள்ளனா். எனவே, வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளைப் பயன்பெறச் செய்ய வேண்டியது அவசியம். மாற்றுத் திறனாளிகளை இந்தத் திட்டத்தில் பயன்பெறச் செய்தால் மட்டுமே இது உண்மையான வெற்றிப் பயணம் திட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.