சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அரசு மருத்துவமனைகளின் கழிவுநீா் பிரச்னை: சுகாதாரத் துறை செயலா்கள் பதிலளிக்க உத்தரவு

மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 14 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :2 செப்டம்பர் 2026, 12:59 am IST

மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 14 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தவிர, 37 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 197 தாலுகா மருத்துவமனைகள், 58 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகா்ப்புற நல மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மருத்துவமனைகளில் உருவாகும் நுண்ணுயிரியல் கழிவுகள், ஆய்வகக் கழிவுகள், மருத்துவப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள், திரவ உயிரியல் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் தொற்றுநோய்கள் பரவுதல், நிலத்தடி நீா் மாசுபடுதல், மருத்துவப் பயனாளிகள், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்டோா் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

2016-ஆம் ஆண்டின் உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, படுக்கை வசதியுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இருப்பது கட்டாயம். ஆனால், தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை.

எனவே, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, கரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி, அவை முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.