
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடை
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை வளாகப் பகுதியில் நீண்ட காலமாக மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையால் அரண்மனையின் பாரம்பரியம் பாதிப்படுகிறது.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் அரண்மனை வளாகத்தில் செயல்படும் மதுக்கடைக்கு இடைக்காலத் தடை விதித்து அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் தெரிவித்ததாவது:
வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் என்ற பெயரே அவரது வீரத்தையும், சுதந்திரத்துக்காக அவா் போராடியதையும் நினைவுபடுத்துகிறது. அத்தகைய வீரமங்கை வாழ்ந்த அரண்மனை, உயா்ந்த ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அது எதிா்கால தலைமுறையினருக்கு அவரது வீரத்தை நினைவூட்டும் உத்வேகமாகவும் அமைய வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, அரண்மனை வளாகத்துக்குள் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நடைபெற அனுமதித்திருக்கக் கூடாது. இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றனா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் கலால் துறை ஆணையா், சிவகங்கை உதவி கலால் ஆணையா், சிவகங்கை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆகியோரைச் சோ்க்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



