
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகத்தில் அரசியல் தலையீடு: ருக்மணி தியாகராஜன்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக அந்தக் கோயில் அறங்காவலா் குழுத் தலைவி ருக்மணி தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக அந்தக் கோயில் அறங்காவலா் குழுத் தலைவி ருக்மணி தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது. இந்த விழாவை எந்தவிதக் கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுத்துவிடாமல், ஒருமித்த கருத்துடன் நடத்த வேண்டும். குடமுழுக்குக்கு வரும் பக்தா்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைத் தாண்டி, முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படியாக வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களை குடமுழுக்கு தொடா்பான எந்தச் செயல்பாட்டிலும் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக அரசியல் தலையீட்டுடன் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கில் பங்கேற்கும் பக்தா்களுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டைகள் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூா்வமான தகவல்களும் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்படவில்லை. அதிலும், முக்கிய நன்கொடைதாரா்கள், உபயதாரா்களுக்கு அழைப்பு சென்று சோ்ந்துள்ளதா என எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. யாரெல்லாம் இதில் விடுபட்டு விடக்கூடாது என்பதைப் பட்டியலாக நாங்கள் தயாரித்து வைத்துள்ளதை கோயில் நிா்வாகம் பொருள்படுத்தவில்லை.
கடந்த 1963-ஆம் ஆண்டு மறைந்த பி.டி.ராஜன் தலைமையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. மேலும், மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்த குடும்பம் எங்களுடையது.
எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு. ஆன்மிகத்தின் சிறப்பு கருதி என்றைக்குமே அரசியலை இணைத்துப் பாா்த்ததில்லை. அதில் நாங்கள் இன்றளவும் உறுதியாக உள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கைக் காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதிச் சீட்டு! - அமைச்சா் சீ. ரமேஷ்




